×

குடிநீர் வாரிய அலுவலகங்களில் புகார் செய்ய கியூஆர் கோடு வசதி: ஸ்கேன் செய்து, புகாரை பதிவு செய்யலாம்

சென்னை: பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், குடிநீர் வாரிய அலுவலகங்களில் கியூஆர் கோடு மூலம் புகார் செய்யும் புதிய வசதியை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். சென்னை மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீரை வழங்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் குடிநீரை தேவையான அளவு பகிர்ந்து அளித்து வருகிறது. மேலும் சென்னையில் கழிவுநீர் அகற்றும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான சேவைகளில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய குறைகளுக்கு தீர்வு காணவும், வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் நுகர்வோர்களிடம் இருந்து புகார்கள் பெறும் வசதிகளை செய்துள்ளது.

இதன் மூலம் புகார்தாரர்களுக்கு உடனுக்குடன் பதில் தருவதுடன், அவர்களின் பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகளை வகுத்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 24 மணி நேர புகார் பிரிவு செயல்படுகிறது. மேலும், இணைய வழி புகார்களை கண்காணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதவிர மின்னஞ்சல் புகார்கள், குறைதீர்க்கும் கூட்டங்கள், குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம், தேசிய உதவி எண் ‘14420’, கட்டணமில்லா  எண் ‘1916’ மற்றும் 24 மணி நேர புகார் பிரிவு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை வாரிய அதிகாரிகளுக்கு எந்த நேரத்திலும் விரைவாகவும், வசதியாகவும் கைபேசி மூலம் தெரிவிக்கலாம். இதுதவிர, தற்போது கியூஆர் கோடு மூலம் புகார் செய்யும் புதிய வசதியை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடிநீர் வாரிய அலுவகங்கள், பணிமனைகளில் ஒட்டப்பட்டிருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக நுகர்வோர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த புகார்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் புகார் தளத்துக்கு செல்லும். அதன் மீது அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள். நுகர்வோர்கள் தங்கள் புகார்களை எளிமையாக தெரிவிக்கும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : QR line facility to complain at Water Board Offices: Scan and register a complaint
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...