×

காதல்வலை வீசி திருமணம்; 3 பெண்களோடு தனித்தனியே குடும்பம் நடத்திய கல்யாண மன்னன்: கணவரை மன்னித்த 3 மனைவிகள்

கோவை: செல்போன் கடை உரிமையாளர் ஒருவர், அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது. பணப் பிரச்னையால் சிக்கிக் கொண்ட அவர் மீது 3 மனைவிகளுமே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசில் கூறிவிட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் போசனகுமார் (28). சூலூர் பிரிவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் போசனகுமார் பெட்ரோல் நிரப்ப அங்குள்ள பெட்ரோல் பங்க்கிற்கு அடிக்கடி சென்றுவந்த போது, அங்கு வேலை செய்த இளம்பெண்ணின் அழகில் மயங்கினார். பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து இங்கு வசித்து வருகிறார்.   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்நிலையில் போசனகுமார் பொள்ளாச்சியை சேர்ந்த தனது நண்பரின் தங்கையை காதலித்து 3வதாக திருமணம் செய்தார். ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே அவர்களுடன் போசனகுமார் காரணம்பேட்டை, நீலாம்பூர், குரும்ப பாளையம் ஆகிய பகுதிகளில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்ப சொத்தை விற்றதில் தனக்கு கிடைத்த பங்கு ரூ.10 லட்சத்தை போசனகுமாருக்கு கொடுத்துள்ளார்.

அதனை திருப்பி கேட்டபோது, போசனகுமார் அவரை மிரட்டியுள்ளார். ரூ.10 லட்சத்தை மீட்டுத் தருமாறு ஐதராபாத் இளம்பெண் சூலூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது போசனகுமார் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தனித்தனியே குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காரணம்பேட்டை, நீலாம்பூர், குரும்பபாளையம் ஆகிய பகுதிகளில் போசனகுமாருடன் வசித்து வந்த 3 மனைவிகளும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் மட்டும் தனது பணத்தை கொடுத்தால் பிரிந்து செல்வதாக கூறினார். இதையடுத்து அவருக்கு ரூ. ஒரு லட்சம் பணம் கொடுக்கப்பட்டது.

ஓரிரு நாளில் மீதி பணம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது. பொள்ளாச்சியை சேர்ந்த பெண், போசனகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தனக்கு தெரியாது என்றும், அவரது மனைவி, குழந்தைகளுக்காக பிரிந்து செல்வதாகவும் கூறிவிட்டு சென்றார். முதல் மனைவியும் தனது கணவர் பல பெண்களுடன் வாழ்வது தனக்கு தெரியாது என கூறினார். போசனகுமாரிடம் குடும்பம் நடத்திய 3 பெண்களும் அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கூறினர்.
இதனையடுத்து அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். போசனகுமாரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினர். காதல் வலைவீசி 3 பெண்களை திருமணம் செய்து தனித்தனியே குடித்தனம் நடத்திய வாலிபரின் செயல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Marriage by throwing love nets; The king of Kalyana who had a separate family with 3 women: 3 wives who forgave their husbands
× RELATED திருமணம் செய்துகொள்ள மறுப்பு...