×

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12வது வரை நேரடி வகுப்பு தொடங்கலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி திறக்கக்கோரி லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், கலெக்டர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம்.

அதன் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம். சில நாட்களுக்கு பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் பள்ளி மனு அளிக்கலாம். அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும்.பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Kallakurichi ,Chennai High Court , Live class to start from 9th to 12th in riot-hit Kallakurichi school: Chennai HC orders
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...