×

சென்னை டூ பம்பா வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து பம்பா வரை வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள்  ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 2 ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு, நாளை முதல் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. மேலும் மண்டல கால பூஜை வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது.   இந்நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்கேற்ப சென்னையில் இருந்து பம்பைக்கு  வரும் 17ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில், பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

சபரிமலை செல்லக்கூடிய பக்தர்கள் பேருந்து டிக்கெட்டுகளை போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in என்ற இணைய பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு தினசரி மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சபரிமலை செல்வதற்கான பேருந்து சேவைகள் ஜனவரி 18ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இதேபோல், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு நிமிடத்துக்கு நிமிடம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Tags : Sabarimala ,Chennai ,Pampa , Chennai to Pampa, Sabarimala, Special Bus, Operation, Transport Department, Notification
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்