வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: நீர்வளத்துறை தகவல்

சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 1,329 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மழை காரணமாகவும், வரத்துக் கால்வாய்கள் மூலமாகவும் 1,920 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னை மக்களின் குடிநீருக்காக 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,811 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாகவும், வரத்துக் கால்வாய்கள் மூலமாகவும் 525 கனஅடி‌ நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 710 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் தற்போது 386 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாகவும், வரத்துக் கால்வாய்கள் மூலமாகவும் 408 கன‌ அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,830 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாகவும், வரத்து கால்வாய் மூலமாகவும் 2,131 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 1,1757 மில்லியன் கன அடியில் தற்போது 7,856 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவை தவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 574 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளுமாக மொத்தம் 1155 ஏரிகள் உள்ளன. இதில் 193 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 240 ஏரிகள் 75 சதவீதமும், 360 ஏரிகள் 50 சதவீதமும், 245 ஏரிகள் 25 சதவீதமும் 111 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் கீழும் நிரம்பியுள்ளன.

Related Stories: