குஜராத்தில் சீட் கிடைக்காததால் பாஜவை மிரட்டும் அதிருப்தியாளர்கள்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் பாஜவின் கவுரவப் பிரச்னை. இங்கு இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதே சமயம், சீட் கிடைக்காதவர்கள் பாஜவுக்கு எதிராக மாறி குடைச்சலை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய எம்எல்ஏ ஒருவரும், 4 மாஜி எம்எல்ஏக்களும் பாஜவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். பழங்குடியினர் தொகுதியான நான்டெட்டில் பாஜ மாஜி எம்எல்ஏவான ஹர்சன் வசவா சுயேச்சையாக வேட்புமனுவே தாக்கல் செய்து விட்டார். இத்தொகுதி காங்கிரஸ் வசமுள்ளது. இங்கு காங்கிரசை எதிர்த்து பாஜ தர்ஷனா தேஷ்முக்கை களமிறக்கி உள்ள நிலையில், வசவா போட்டியிடுவது பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல, இன்னும் பல சீட் கிடைக்காத முக்கிய தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களமிறங்க ஆலோசிப்பதாக வெளியாகி உள்ள தகவலால் பாஜ கட்சி கவலை அடைந்துள்ளது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன.

முதல்வர் வேட்பாளர் கம்பாலியாவில் போட்டி

ஆம் ஆத்மி கட்சி சார்பில் குஜராத் முதல்வர் வேட்பாளராக முன்னாள் டிவி பத்திரிகையாளரான ஐசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், தனது சொந்த மாவட்டமான துவாரகாவின் கம்பாலியா தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் நேற்று டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றவர் மகளுக்கு சீட் தந்தது பாஜ

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 28ம் தேதி நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 32 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் மனோஜ் குக்ரானியும் ஒருவர். இவருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து மனோஜ் குக்ரானி ஜாமீனில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், இம்மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், இவரது மகள் பாயல் குக்ரானிக்கு நரோடா பாட்டியா தொகுதியில் பாஜ சீட் தந்துள்ளது. மகள் பாயலுடன் சேர்ந்து மனோஜ் குக்ரானியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பாயலுக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை. ஆனாலும் தற்போதைய எம்எல்ஏ பல்ராம் தவானிக்கு சீட் தராமல் புறக்கணித்தது உள்ளூர் கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: