சென்னை: மயிலாப்பூர் தாதா சிவக்குமார் கொலை வழக்கில், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி ஆர்.டி.ஆர் பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல தாதா மயிலாப்பூர் சிவக்குமார் கடந்த 2021 மார்ச் மாதம் அசோக் நகர் நல்லாங்குப்பத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு சென்னை, ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த தோட்டம் சேகரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அவரது மகன்கள் அழகுராஜா, பாலாஜி மற்றும் கூலிப்படை தலைவன் மதுரை பாலா ஆகிய கும்பலுடன் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சிலர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஆர்.டி.ஆர்.பாலாஜியும் இந்த கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையிலிருந்து வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தனிப்படை போலீசார் நேற்று ஆர்.டி.ஆர்.பாலாஜியை கைது செய்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கொலை செய்த சம்பவத்தை காட்சிகளுடன் விவரித்து கானா பாடலை பாடிய ரவுடி ஆர்.டி.ஆர் பாலாஜி அதை வெளியிட்டுள்ளதால் இதுதொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.