×

வேடசந்தூர் சாலை மேம்பாலத்தின் கீழே புறவழிச்சாலைப் பகுதியில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் : வாகனஓட்டிகள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் : வேடசந்தூர் சாலை மேம்பாலத்தின் கீழே புறவழிச்சாலை பகுதியில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற காந்தி மற்றும் காமராஜர் காய்கறி மார்க்கெட், தயிர் மார்க்கெட், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், திருமண மண்டபங்கள், நீதிமன்றங்கள், வேளாண் விற்பனைக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பேருந்து நிலையத்தின் அருகே இருப்பதால் முக்கிய பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் விவசாயிகள், வியாபாரிகள் அதிகளவில் மார்க்கெட்டிற்கு வருவதால் நகர் முழுவதும் போக்குவரத்து நெறிசலாக காணப்படும்.
இதனை கருத்தில்கொண்டு வருங்காலங்களில் போக்குவரத்து நெரிசலை நகர் பகுதியில் முற்றிலும் கட்டுப்படுத்துவதற்காகவும் லெக்கையன்கோட்டையிலிருந்து - அரசப்பபிள்ளைபட்டி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இந்த புறவழிச்சாலையில் வேடசந்தூர் செல்வதற்கு ஒரு மேம்பாலமும், தாராபுரம் செல்வதற்கு ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டது. வேடசந்தூர் மேம்பாலத்தின் வழியாக ஒட்டன்சத்திரம் நகரிலிருந்து வேடசந்தூர், கரூர், பள்ளபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, பெங்க;ர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையிலும், தாராபுரம் சாலையில் உள்ள மேம்பாலத்தின் வழியாக கோவை, திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் ஒட்டன்சத்திரம் நகருக்குள் செல்லாமல் இந்த புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் சாலை மேம்பாலத்தின் கீழே பிரிந்து செல்லும் அணுகு சாலைகளில் அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் இல்லாததால், லெக்கையன்கோட்டையிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் மறுபடியும் அத்திக்கோம்பை வழியாக வந்து மீண்டும் ஒட்டன்சத்திரம் நகருக்குள்ளே வந்து விடுகின்றனர். அதேபோல் தாராபுரம் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேடசந்தூர் வழியாக சென்று விடுகின்றனர். இதனால் பாதைகள் தெரியாமல் பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து கொல்லபட்டியைச் சேர்ந்த ஜாஹிர்உசேன் என்பவர் கூறுகையில், ‘‘ஒட்டன்சத்திரம் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையின் மேம்பாலத்தின் வழியாக செல்வதற்கான அணுகு சாலைகளின் நாகணம்பட்டி, கொல்லபட்டி, அத்திக்கோம்பை உள்ளிட்ட ஊர்களுக்கு பெயர் பலகை இல்லை.

 மேலும் இரவில் பாலத்தின் கீழ் பகுதிகளில் மின் விளக்குகள் இல்லாததாலும் விபத்துக்களும் ஏற்படுகிறது. கொல்லபட்டி செல்வதற்கு புறவழிச்சாலையை கடந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது. இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்களின் கோரிக்கையினை அடுத்து, கடந்த மாதம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் நேரில் வந்து, ஆய்வு செய்துவிட்டு சென்றனர். உடனடியாக இப்பகுதியில் கொல்லபட்டி செல்லும் சர்வீஸ் ரோடும், உரிய இடத்தில் ஊர்களின் பெயர் பலகைகள் வைக்கவும், மேலும் புறவழிச்சாலை ஆரம்பிக்கும் இடமான லெக்கையன்கோட்டையில் முறையான ரவுண்டானா அமைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Vedasantur , Oddanchatram , Vedasandur, ByePass Road, Motorists request, Name Board
× RELATED ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்