×

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் காளாஞ்சிபட்டி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் வங்கிக்கு சொந்தமான வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதில் பழநியில் இருந்து கரூரில் உள்ள தனியார் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு கணியம்பாடி அருகே உள்ள கீழ்வல்லம் சோதனை சாவடி அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூரிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.74.50 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் காரில் வந்தவர்களிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் ஆற்காடு சார் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

The post ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ottenchatram ,Election ,Squad ,Sakthivel ,Kalanchipatti ,Othanchatra ,Vedasantur ,Dindigul district ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி...