×

15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் பணியாற்றியவர் பொய் வழக்கு பதிவதாக தொடர் குற்றச்சாட்டால் தூக்கியடிக்கப்பட்ட விஜிலன்ஸ் டிஎஸ்பி: பழைய வழக்குகளை மறு ஆய்வு செய்ய கோரிக்கை: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பகுதியில் பணியாற்றி வந்த விஜிலன்ஸ் டிஎஸ்பி மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரை அதிரடியாக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கடந்த 4ம் தேதி இரவு பல்வேறு காரணங்களுக்காக 47 டிஎஸ்பிக்களை மாற்றி உத்தரவிட்டார். கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பீட்டர் பால்துரையும் அதிரடியாக மாற்றப்பட்டு தேனி மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பீட்டர் பால்துரை,  15 ஆண்டுகளுக்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தென் மாவட்டங்களிலேயே பணியாற்றி வந்தார். குறிப்பாக கன்னியாகுமரியில் இன்ஸ்பெக்டராகவும், டிஎஸ்பியாகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் 14ம் தேதி நாகர்கோவில் வடசேரி டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் ரெஜின் என்பவரது வீடு மற்றும் மாவட்ட மேலாளர் விஜய சண்முகம் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெஜினின் வீட்டில் இருந்து ரூ.1.77 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் குறித்து ரெஜினிடம் விசாரித்தபோது தனது மகன் கோவையில் இன்ஜினியரிங் படிக்கிறார். அவருக்கு கல்வி கட்டணம் கட்ட தன்னுடைய வீட்டில் உள்ள நகை மற்றும் உறவினர்களிடம் நகைகைளை வாங்கி விற்பனை மற்றும் அடமானம் வைத்து இந்தப் பணம் வைத்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கான ரசீதையும் காட்டியுள்ளார். .

ஆனால் அதை ஏற்க மறுத்த டிஎஸ்பி பீட்டர் பால்துரை, தன் சொல்படி கேட்டால் பணத்தை திருப்பித் தருவதாக கூறியதால், அவர் சொன்னபடி எழுதிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு பணத்தை தராமல், மாவட்ட மேலாளர் விஜயசண்முகத்திற்காக லஞ்சப் பணத்தை ரெஜின் வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விட்டனர். இதனால் தன்னுடைய பணத்தை தரும்படி கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் ரெஜின் புகார் செய்தார். இது குறித்து விசாரித்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேண்டும் என்றே, பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காகவே பணத்தை பறிமுதல் செய்திருப்பது உறுதியனாது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமிக்கும் புகார் சென்றது. அவரது விசாரணையிலும் இவர் இதுபோல பல வழக்குகளில் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா பணியில் இருந்தபோது இரவு 7 மணிக்கு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் அலுவலகத்தில் தனித்தனியாக 8800, 18,200, 15,000,4200, 3000 ரூபாய் இருந்ததாகவும், ஆனால் இந்தப் பணம் யாரிடம் இருந்தும் கைப்பற்றப்படவில்லை. அலுவலக அறையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.

இந்தப் பணம் எல்லாம் லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று டிஎஸ்பி பீட்டர் பால்துரை வழக்குப்பதிவு செய்தார். அதோடு, பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள், வெளியில் பத்திரம் எழுதும் 6 எழுத்தர்களின் கடைகளில் இருந்தும், வக்கீல் ஒருவரின் உதவியாளரிடம் இருந்தும் 3,98,800 பறிமுதல் செய்ததாக வழக்குப்பதிவு செய்தார். இந்தப் பணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்வதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தார். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மட்டும் ரூ.4.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் செய்தி கூறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.

ஏற்கனவே, அறநிலையத்துறை நிலம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பல அதிகாரிகளை விட்டு விட்டு ஒரு அதிகாரி மீது மட்டும் அவர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் புகாார் இருந்தது. இவ்வாறு ஒரே மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அவர் பணியாற்றி வருவதும், திட்டமிட்டு பொய்யான புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வதாகவும் புகார்கள் கூறப்பட்டன. அதைத் தொடர்ந்து அவரை மாற்ற வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி பரிந்துரையின்பேரில் பீட்டர் பால்துரையை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரத்தில் பீட்டர் பால்துரை பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு துறைகளின் அதிகாரிகள் சார்பில், இயக்குநருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : DSP ,DGP , 15 years, same part, served, Vigilance DSP, old case, re-examination, request to do, DGP Sailendrababu, Action
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...