×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புன்னை, பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி அடுத்த புன்னை மற்றும் பனப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை மற்றும் பனப்பாக்கம் ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் நெமிலி, அசநெல்லிகுப்பம், நெல்வாய், சயனபுரம், வேட்டாங்குளம், கீழ்வெங்கடாபுரம், அகவலம், கீழ் வீதி, மகேந்திரவாடி, சிறுணமல்லி, சேந்தமங்கலம், பனப்பாக்கம், நெடும்புலி, ரெட்டிவலம், மேலப்புலம், சிறுவளையம், பெருவளையம் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

ஆனால்  புன்னை, பனப்பாக்கம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்  மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்துக்குள் கட்டிடங்கள் போதிய அளவுக்கு இல்லாததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள் காத்திருப்பு கூடத்திற்கான இட வசதிகள் இல்லாததால் மழை மற்றும் வெயில் நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வாரம்தோறும் செவ்வாய் கிழமை கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைகள் நடைபெறும். அதில் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வருவார்கள்.

அவர்களுக்கு தங்குவதற்கு கூட போதிய இடவசதி இல்லாமல் மற்றும் மருத்துவர்கள் இல்லாததாலும் காலையில் வந்தால் மாலை வரையும் ஒரு நாள் பொழுது முழுவதும் மருத்துவமனையிலே இருந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால்  கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கி உள்ள பகுதிகளில்  இரவு நேரங்களில் விஷ பூச்சிகள், விஷப்பாம்புகள் கடித்தால் அதற்கான உரியசிகிச்சை மருந்துகள், ஊசி இல்லாத காரணத்தால் பல்வேறு உயிர் இழப்புகள் ஏற்படும்  சூழ்நிலையில் உள்ளது.

இரவு நேரங்களில் விபத்துக்கள் மற்றும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு சிகிச்சைக்காக வந்தால் மருத்துவர்கள் இல்லை என கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை உள்ளதால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சில நேரங்களில் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு விடுகின்றன என பொதுமக்கள் கூறுகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்திற்கு உள்ளேயே  கழிவுகள், பழுதடைந்த  நிலையில் பூட்டு போட்டு பயன்பாடு இன்றி உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.மேலும் இங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் போன்ற உபகரணங்கள் இருந்தும் அதை பயன்படுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் எக்ஸ்ேர மற்றும் ஸ்கேன் செய்ய அரக்கோணம், காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர்  போன்ற இடங்களுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

அதேபோல் புதியதாக கட்டப்பட்ட புறநோயாளிகள் கட்டிடத்தை இதுவரை திறக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் புற நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புன்னை, பனப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புன்னை, பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு தெரிவித்து உடனடியாக  அரசு மருத்துவமனையாக தர உயர்த்த வேண்டும்.
பற்றாக்குறை உள்ள மருத்துவர்களை உடனடியாக நியமனம் செய்து புதிய கட்டிடங்களை அமைத்து நோயாளிகளின் சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து நெமிலி தனித் தாலுகாவாக உதயமாகி 7ஆண்டுகள் ஆகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நெமிலி தாலுகா அலுவலகமாக தலைமை இடமாகக் கொண்ட பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாளாக கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து புதிய மருத்துவக் கட்டிடங்களை அமைத்து மருத்துவர்கள் நியமித்து பொதுமக்கள் நலனை கருதி புன்னை மற்றும் பனப்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தர  உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Punnai ,Panapakkam ,Ranipet district , Nemili: Nemili next Punnai and Panapakkam primary health centers should be upgraded as government hospitals.
× RELATED பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு