×

முல்லை நகர் கேப்டன் கால்வாய் பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளால் 40 வருட பிரச்னைக்கு தீர்வு: வடசென்னை மக்கள் நிம்மதி

பெரம்பூர்: முல்லை நகர் கேப்டன் கால்வாய் பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளினால் 40 வருட பிரச்னைகளுக்கு, 6 அடி சுவர் மற்றும் மின் மோட்டார் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தென் சென்னையை ஒப்பிடுகையில் வட சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது இயல்பு. இதற்கு காரணம் குறுகிய சாலைகள், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சிறிய அளவிலான கால்வாய்கள், பராமரிப்பின்றி தூர்ந்த கால்வாய்கள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை ஆகும். இதனால், மழைநீர் வெளியேற போதிய வசதி இருக்காது. ஒட்டுமொத்தமாக சில நேரங்களில் பலத்த மழை பெய்யும் போது கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு மொத்த நீரும் சாலைகளின் வழியாக வீட்டிற்குள் தேங்குவது வாடிக்கை.

அதுவும் குறிப்பிட்ட இடங்களில் ஆண்டுதோறும் கால்வாய்கள் நிரம்பி குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்பதும், அதனை மின்மோட்டார்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதும் வழக்கமாக நடைபெறும். சென்னையில் இதுபோன்று பல இடங்கள் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும் மழைக்காலம் முடிந்த பின்பு அது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் அப்பகுதி மக்கள் அதே இடத்தில் வசித்து வருவதும் வடசென்னை மக்களுக்கு பழகிப்போன ஒன்றாக மாறிவிட்டது.

அந்த வகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  37வது வார்டு வியாசர்பாடி முல்லை நகர் பகுதியும் ஒன்று. இங்குள்ள கேப்டன் கால்வாய் கொடுங்கையூர், எம்கேபி நகர், முல்லை நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேற முக்கிய கால்வாயாக உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீர் வந்து நிரம்புவதால் மழைக்காலங்களில் இந்த கால்வாய் நிரம்பி அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுவிடும்.

அவ்வாறு தண்ணீர் செல்லும்போது கொடுங்கையூர் ஆர்ஆர் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், முல்லை காம்ப்ளக்ஸ் போன்ற இடங்கள் பெரிதும் பாதிக்கப்படும். மழை விட்டு குறைந்த பட்சம் 5 நாட்கள் வரை வீடுகளில் உள்ள தண்ணீர் வெளியேற பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்து வந்தது. இந்நிலையில், கேப்டன் கால்வாயில் பகுதியில் அருகில் 10 அடி ஆழத்திற்கு கிணறு ஒன்று தோண்டி, மழைநீர் கால்வாயில் இருந்து வரும் நீர் அந்த கிணற்றுக்குள் சென்று அதன் பின்பு மின்  மோட்டார் மூலம் அதனை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்றன. மேலும் கேப்டன் கால்வாய் பகுதியில் ஆறடி உயரம், ஆறடி மீட்டர் நீளம், ஒரு அடி அகலத்தில் ரூ.5 லட்சம்  செலவில் தடுப்பு சுவர் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் அணைகளில் மதகு வைத்து தண்ணீரை தடுப்பது போன்று இதிலும் மழைக்காலத்தில் தண்ணீரை தடுத்து தண்ணீர் மீண்டும் பின்னோக்கி வருவதை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்தனர். இதன் மூலம் கேப்டன் கால்வாயை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் சூழாமல் கால்வாய் மூலமாக வெளியேறியது. மேலும் கால்வாய் பகுதியில் உள்ள கிணறில் இருந்து மழைநீரை எடுத்து கேப்டன் கால்வாயில் விடுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் 22 எச்.பி திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தி அந்த பணியையும் சிறப்பாக செய்தனர்.  இதனால் சமீபத்தில் பெய்த கடும் மழையில் கூட குறிப்பிட்ட கேப்டன் கால்வாய் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லாமல் உரிய முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 இதுகுறித்து, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலம் துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மின் மோட்டார் அமைப்பதற்கும், சுவர் அமைப்பதற்கும் உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு 40 ஆண்டுகால பிரச்னைக்கு இந்த மழை காலத்தில் தீர்வை ஏற்படுத்தி உள்ளனர்.


Tags : Mullai Nagar ,North Chennai , Mullai Nagar, Captain canal area, flood control work, 40 years old problem, solution
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது