×

வடகிழக்கு பருவ மழை தொடங்கியும் தமிழகத்தில் வறண்டு காணப்படும் 432 ஏரிகள்: நீர்வளத்துறை தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியும் வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 432 ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப்பொழிவில் 48 சதவிகிதம் தமிழகத்துக்கு கிடைக்கிறது. மேலும், கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும், இந்த ஆண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை  தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்மழை பெய்து வரும் நிலையில் 2,514 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 2,077 ஏரிகளில் 75 விழுக்காடு கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாதி அளவில் 2,842 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. மிக குறைந்த அளவில் 2,968 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. இதில் 432 ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 148 ஏரிகள், தென்காசி மாவட்டத்தில் 103 ஏரிகள் நீரின்றி வறண்டு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் மற்றும் பூண்டி நீர் தேக்கங்களில் போதுமான அளவுக்கு நீரின் கொள்ளளவு உள்ளது.

Tags : Tamil Nadu ,Water Resources Department , 432 lakes found dry in Tamil Nadu after onset of northeast monsoon: Information from Water Resources Department
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...