×

அரசு டாக்டர் நடத்தும் கிளினிக்கில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட 5 வயது சிறுவன் சாவு: ராஜபாளையத்தில் பரபரப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். மனைவி கற்பகவள்ளி. இவர்களது மகள் யுவஸ்ரீ (10), மகன் கவிதேவநாதன் (5). கற்பகவள்ளி உடல்நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகளை மகேஸ்வரனின் தாய் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கவிதேவநாதனுக்கு, 2 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டின் அருகில் உள்ள மருந்தாளுநர் ஒருவர் ஊசி போட்டுள்ளார். இருப்பினும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், சம்பந்தபுரத்தில் நடத்தும் கிளினிக்கிற்கு சென்று நேற்று ஊசி போட்டுள்ளனர். வீட்டுக்கு வந்த அரை மணிநேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன், ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின் உறவினர்களிடம் சமாதானம் செய்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், ‘தவறான ஊசியால் சிறுவன் இறந்தானா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும்’’ என்றனர். சிறுவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Rajapalayam , 5-year-old boy dies after being injected for fever at a clinic run by a government doctor: stir in Rajapalayam
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்