×

துரைப்பாக்கம் 200 அடி ரோட்டில் சாலைகளில் மழைநீர் தேக்கம்; கடும் போக்குவரத்து பாதிப்பு

துரைப்பாக்கம்: தொடர் மழை காரணமாக துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் 200 அடி சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளான பெருங்குடி கல்லுக்குட்டை, சீவரம் 1, 2, 3 தெருக்களிலும், துரைப்பாக்கம் ஆனந்த நகர், வினாயகா நகர், எல்லையம்மன் நகர், மேட்டுக்குப்பம் வி.பி.ஜி. அவென்யூ, சோழிங்கநல்லூர் காந்தி நகர், செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக, தொடர் மழை காரணமாக செம்மஞ்சேரி தோப்பு, ராஜிவ் காந்தி நகர், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, எழில்முகநகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொடர்மழை காரணமாக ராஜிவ் காந்தி சாலை, துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் 200 அடி சாலை, கிழக்கு சாலைகளில் ஆங்காங்கே தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதிகளில் குளம், ஏரிகள் அதிக அளவில் உள்ளன. இதில் சில குளங்கள் ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாறி உள்ளது. இதனால், மழைநீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே சாலைகள் மற்றும் காலி நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு மழைநீர் செல்ல வழிவகை செய்தால் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை இருக்காது என்றனர்.

Tags : Duraipak , Rainwater ponding on roads in Duraipak 200 feet road; Heavy traffic damage
× RELATED மாநகர பேருந்து நடத்துனரிடம் ரூ.14,000 டிக்கெட் திருட்டு