×

தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது!: மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் சட்டப்பேரவை சபாநாயகர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்து கொண்டிருக்கிறார். 
இதற்கு பின்பாக இரங்கல் தீர்மானமானது நிறைவேற்றப்பட இருக்கிறது. பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமானது பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கிறது. இதையடுத்து வழக்கமான சட்டப்பேரவை விதிகளின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் சட்டமன்ற பேரவையினுடைய மாற்று தலைவர்களுக்கான பட்டியலையும் அறிவிக்கிறார். 
மேலும் பல்வேறு குழுக்கள் பேரவையில் அமைக்கப்படவிருக்கிறது. அதன் அடிப்படையில் மதிப்பீட்டு குழு, பொது கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு மற்றும் அவை உரிமை குழுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவை, அவை மூத்தவர் துரைமுருகன் முன்மொழிய இருக்கிறார். இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கவிருக்கிறது. 
சட்டமன்ற உறுப்பினர் உதயதீரணும் அதற்கான முன்மொழிவை பெற்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடங்கிவைக்கிறார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். அதில் திமுக சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் உதயசந்திரன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா ஆகியோர்  பேச இருக்கிறார்கள். 
அதிமுக-வின் சார்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ரவி மற்றும் பொள்ளாச்சி ராமன் ஆகியோரும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் பேசுகின்றனர். காங்கிரசை பொறுத்தவரையில் விஜயதரணி பேசுகிறார். இந்த கூட்டத்தில் மறைந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

The post தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது!: மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Tags : 2nd day ,Tamil Nadu Legislation ,Chennai ,Chennai Artisan Arena ,Governor ,Tamil Nadu ,
× RELATED தைவானைச் சுற்றிலும் 2வது நாளாக நவீன...