×

வியன்னா ஓபன் டென்னிஸ்:பைனலில் ஷபலோவை வீழ்த்தி மெட்வடேவ் வெற்றி

வியன்னா: வியன்னா ஓபன் டென்னிஸ் பைனலில் ஷபலோவை வீழ்த்தி, மெட்வடேவ் கோப்பையை கைப்பற்றினார். வியன்னாவில் நேற்று இரவு நடந்த பைனலில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷபலோவும் மோதினர். ஏடிபி தரவரிசையில் மெட்வடேவ் 3ம் இடத்திலும், ஷபலோவ் 16வது இடத்திலும் உள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக துவங்கிய இப்போட்டியில் முதல் செட்டை 6-4 என ஷபலோவ் கைப்பற்றினார். 2வது செட்டிலும் அவர் 4-3 என முன்னிலையில் இருந்தார். இருப்பினும் நிதானமான அணுகுமுறையை கடைபிடித்து ஆடிய மெட்வடேவ், 2வது செட்டை 6-3 என வசப்படுத்தினார்.

3வது செட்டில் மெட்வடேவின் துல்லியமான சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் ஷபலோவ் திணறினார். சரியான இடங்களில் பந்தை பிளேஸ் செய்த மெட்வடேவ், அந்த செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றி, ஷபலோவின் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல் செட்டை இழந்த பின்னர் 4-6, 6-3, 6-2 என 3 செட்களில் ஷபலோவை வீழ்த்திய மெட்வடேவின் ஆட்டம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கோப்பையை கையில் வாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் மெட்வடேவ் கூறுகையில், ‘‘2வது செட்டில் ஷபலோவின் ஆட்டத்திறனில் 2 சதவீதம் குறைந்தது. அதை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். இந்த போட்டி சிறந்த ஒன்று என நான் கருதுகிறேன்.

எதிராக ஆடுபவர் திறமையான வீரர் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு என்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டேன்’’ என்று தெரிவித்தார். இப்போட்டியையும் சேர்த்து, இதுவரை இருவரும் மொத்தம் 6 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் மெட்வடேவ் 4 போட்டிகளிலும், ஷபலோவ் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Vienna Open Tennis ,Medvadev ,Shabalo , Vienna Open Tennis: Medvedev beats Shabalo in final
× RELATED மெட்வதேவுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை: பெடரர், நடாலை முந்த வாய்ப்பு