×

நத்தம் பகுதியில் 6 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி நடவடிக்கை ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால் 40 ஆண்டுக்குபின் ஏரியில் நீர்வரத்து

* 1500 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறும்

* விவசாயிகள், கூலிதொழிலாளிகள் மகிழ்ச்சி

* மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டு

திருப்பத்தூர் : கந்திலி ஒன்றியத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கால்வாய் புதியதாக அமைத்து 3 ஏரிகளுக்கு நீர் வரத்துக்கு வழிவகை செய்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்களும் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் முன்மாதிரி ஊராட்சியாக நத்தம் ஊராட்சி செயல் பட்டு வருகிறது. நத்தம் ஊராட்சியில் சுமார் 10, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் குடிநீருக்காக கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 இந்த நிலையில் சுந்தரம்பள்ளி அருகே உள்ள துலாநதி ஆறு இருந்து வந்தது. இந்த ஆறு ஆந்திர மாநிலத்தில் தொடங்கி சாத்தனூர் அணை சென்று அடையும் மிகப்பெரிய ஆறு ஆகும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மணல் கொள்ளையர்களால் துலாநிதி ஆற்றை முற்றிலுமாக சுரண்டி ஒரு சொட்டு கூட தண்ணீர் வராத சூழல் ஏற்பட்டது. கடந்த பல வருடங்களாக கனமழை பெய்து மாவட்டத்தில் உள்ள 29 ஏரிகள் நிரம்பி வழிந்தது. ஆனால், துலாநிதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், அருகே உள்ள நத்தம் பெரிய ஏரி நிரம்பவில்லை. காரணம், மணல் கொள்ளையர்களால் ஏரிக்கால்வாய்கள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வறண்டு கிடந்தது.

இந்தநிலையில், புதியதாக தேர்வான நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் துரித நடவடிக்கை எடுத்தார். இதன்பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரிக்கால்வாய்கள் மற்றும் ஏரி பகுதிகளுக்கு செல்லும் கிளை கால்வாய்களை கண்டறிந்து அதனை ஜேசிபி எந்திரங்கள் மூலம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் கடந்த 20 நாட்களாக புதிய ஏரிக்கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. தற்போது, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.  

 இதன்காரணமாக, நத்தம் ஊராட்சியில் உள்ள செம்மண் குட்டை ஏரி, நத்தம் பெரிய ஏரி, கங்கை அம்மன் ஏரி ஆகிய மூன்று ஏரிகளுக்கும் துலாநிதி ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால் சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும் என்று விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள், கிராமமக்கள் கூறியதாவது: 40 ஆண்டுகளாக நாங்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் பஞ்சம் பிழைக்க கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு கட்டுமான தொழிலுக்கு சென்று இருந்தோம். எங்கள் வயல்வெளிகள் அனைத்தும் வறண்டு கிடந்தது. தற்போது இந்த ஊராட்சி மன்ற தலைவரின் துரித நடவடிக்கையால் கால்வாய்கள் வெட்டப்பட்டு மூன்று ஏரிகளுக்கு நீர்வரத்து வந்துள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

எங்கள் குலத் தொழிலான விவசாயத்தை மீண்டும் தொடங்கி நெல், வாழை, கடலை, கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிட்டு உள்ளோம். எங்கள் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருந்த எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் குமாருக்கு நாங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்ட திட்ட அலுவலர் செல்வராசுவிடம் கேட்டபோது கூறியதாவது:

ஊராட்சி மன்ற தலைவர் குமார் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். 40 ஆண்டுகளாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்த ஏரிக்கு தற்போது அவருடைய சொந்த முயற்சியால் 6 கிலோ மீட்டர் தூரம் நீர்வரத்து கால்வாய் வெட்டப்பட்டு ஏரிகளுக்கு நீர்வரத்து வந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாய்கள் அடைப்பு உள்ளிட்டவைகள் இருந்தால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அங்கு சர்வே செய்து அதன் பின்னர் அந்த கால்வாய்களை தூர்வாரப்பட்டு வரவுள்ள வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி நீர் வரத்து இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நத்தம் ஊராட்சியைபோல் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகளை துரிதமான நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுபற்றி, ஊராட்சி மன்ற தலைவர் குமாரிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தோம். எங்கள் பகுதியில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது.

ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு ஒரு நல்ல சேவையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நீர்வரத்து கால்வாயை நான் கண்டறிந்து புதியதாக நீர்வரத்து கால்வாய்கள் 6 கிலோமீட்டர் தூரம் அமைத்தேன். இப்போது, 3 ஏரிகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது இது மிகவும் மன மகிழ்ச்சியை அளிக்கிறது. மாவட்டத்தில் முன்மாதிரியான ஊராட்சியாக இந்த ஊராட்சியை செயல்படுத்த வேண்டும் என்று பணியாக செய்து வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.  



Tags : Natham ,Panchayat Council ,President , Tirupattur: After 40 years in Natham panchayat in Kandili union, a new lake canal was constructed to supply water to 3 lakes.
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...