×

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி தொடங்கியது

*விதைநெல் தெளிக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர் : கோடை சாகுபடியை முன்னிட்டு தஞ்சை அருகே புலவர் நத்தம் பகுதியில் விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டார் மூலம் கோடை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. எனவே விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24ம் தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவில் நடைபெற்றது. அதே போல நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர் அடுத்த புலவர் நத்தம் பகுதியில் விவசாயிகள் வயல்களில் விதைநெல் தெளித்து வருகின்றனர். ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,கடந்தாண்டைப்போல் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நம்புகிறோம். இதனால் தற்போது முன்பட்ட குறுவைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை வரும். கோடை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வாங்கி இருப்பு வைத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Bulawar Natham ,Dinakaran ,
× RELATED அம்மாபேட்டை பகுதியில் மும்முனை...