அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் ஆன்லைனில் தொழிலாளர் குறைத்தீர்வு வசதி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ஆன்லைனில் தொழிலாளர் குறை தீர்வு வசதியை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யும் முறையினை எளிமை படுத்தவும், நலத்திட்ட உதவிகளை விரைவாக பெறுவதற்கும் ஆன்லைன் வசதி உருவாக்கப்பட்டது.

இந்த ஆன்லைன் குறை தீர்வு வசதியை சென்னையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். ‘ இந்த நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலத்துறை செயலாளர் நஜுமுதீன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இயக்கக இயக்குனர் செந்தில்குமார், கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலாளர் செந்தில்குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் வாயிலாக 10,81,137 அமைப்புசாரா தொழிலாளர்கள் 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது நல வாரியங்களில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆன்லைன் குறை தீர்வு வசதி மூலம் தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களின் மீதான நிலையினை தெரிந்து கொள்ளவும், குறுஞ்செய்தி மூலம் குறை தீர்வு நிலையினை அறிந்துகொள்ளவும் வசதி உள்ளது.

Related Stories: