×

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு: அரசு புதிய அறிவிப்பாணை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில், புதிய அறிவிப்பாணையை வெளியிடுமாறு தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக பள்ளிக் கல்வி துறையில்  பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார்.

அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். 2022 ஜூலை 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டுமென்று உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயர்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டுமென்று வாதிடப்பட்டது. ஆசிரியர் சக்திவேல் தரப்பில், தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிப்பதற்காக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் தரப்பில், கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித்தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது.  கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களா நியமிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்தும் புதிய அறிவிப்பாணையை அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : ICourt ,Govt , Counseling for graduate teachers who have passed the TET exam: ICourt directs Govt to issue fresh notification
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...