ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமை பெறாததால் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதுடன் தீர்த்தமாடும் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற அக்னி தீர்த்த கடலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். ராமேஸ்வரம் நகரில் உள்ள வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் வாறுகால்வாய் மூலம் ராமேஸ்வரம் கடலில் கலக்கிறது.
இதனால் கடல் மாசுபட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதியிலும் கலந்து வருவதால் தீர்த்தம் கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இதனால் தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் அருவருப்பான மனநிலையில் தீர்ந்தமாடி செல்லும் அவல நிலை உள்ளது. ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆறு மாதங்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் இறுதி கட்டப் பணிக்கு தேவையான நிதி வராததால் மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையடையாமல் உள்ளது.
இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மழை காலத்தில் சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் பணிகள் முடியாததால் நகரிலுள்ள கழிவுநீர் வாறு கால்வாய்களில் ஓடும் சாக்கடை கழிவுநீர் வேர்கோடு கடற்கரை, பிஎஸ்என்எல் அலுவலக கடற்கரை, மார்க்கெட் தெரு கடற்கரை, துறைமுக அலுவலர் குடியிருப்பு கடற்கரை, கிழக்கு ரதவீதி கடற்கரை, அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகள் வழியாக ராமேஸ்வரம் கடலில் கலக்கிறது.
இந்த பகுதிகள் மிகவும் ஆழமற்ற கடல் பகுதியாக இருப்பதால் கடலில் கலக்கும் கழிவுநீர் கரைப்பகுதியிலேயே தங்கி விடுகிறது. இதனால் கழிவுநீர் கடலில் சேரும் இடத்தில் கடல் பகுதி சேறும் சகதியுமாக கருப்பு நிறத்திற்கு மாறிவிட்டது. அக்னி தீர்த்த கடற்கரை பகுதி உட்பட அனைத்து பகுதியில் கடலில் சேரும் கழிவுநீர் நீரோட்டத்தினால் அக்னி தீர்த்த கடல் பகுதியில் மொத்தமாக சேருகிறது.
இதனால் அக்னி தீர்த்த கடலும் கழிவுகள் தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறி விட்டது. இதனை புண்ணிய தீர்த்தமாக கருதி நீராடும் பக்தர்கள் அருவருப்புடன் முகம் சுளித்தபடி குளித்து செல்கின்றனர். மேலும் தீர்த்தமாடிச் செல்லும் பக்தர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழ்நிலை உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புண்ணியம் தேடி ராமேஸ்வரத்திற்கு தீர்த்தமாட வரும் பக்தர்கள் தொற்று நோய்களை வாங்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் இப்போதைக்கு முடியாது என்பதுடன், பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்தாலும் சீரான செயல்பாடு இருக்காது என்றே ஓய்வு பெற்ற அதிகாரிகளும், பொறியாளர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் புனித நீராடும் பக்தர்கள் நலன் கருதியும், கடல் மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடித்து கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக மக்களின் பங்களிப்பு நிதி என்ற பெயரில் ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்கள் ஒவ்வொரிடமும் வழக்கமான தீர்த்த டிக்கெட் கட்டணத்துடன் ஒரு ரூபாய் கோயில் நிர்வாகத்தினால் வசூலிக்கப்பட்டது. இதுபோல் ராமேஸ்வரத்தில் அரசு மானிய டீசல் விற்பனை மையத்திலும் விசைப்படகுகளுக்கு டீசல் பிடிக்கும்போது தலா ஒரு படகிற்கு ஒரு ரூபாய் வீதம் டீசல் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்பட்டது. பல ஆண்டுகள் இதுபோல் வசூலிக்கப்பட்ட நிலையில் எவ்வளவு தொகை சேர்ந்தது, யாரிடம் உள்ளது, திட்டத்திற்கு வழங்கப்பட்டதா எனபது குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ராமேஸ்வரம் பாதாள சாக்கடை திட்டம் பேஸ்1, பேஸ்2, பேஸ்3 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு பிரிகளில் உள்ள நகர் பகுதியில் மட்டுமே தற்போது பணிகள் நடைபெற்றுள்ளது. நிலத்திற்கு கீழே கழிவுநீர் செல்வதற்கான குழாய்கள், வீடுகளுக்கான இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடியாமல் உள்ளது. இறுதி கட்டப்பணிகளுக்கு தேவையான நிதி இல்லாததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ராமேஸ்வரம் நரிக்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு கழிவுநீர் செல்லும் குழாய்கள் ஒலைக்குடா கிராமப்பகுதி வழியாக செல்கிறது. இதனால் ஓலைக்குடா கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புதிதாக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விசாரணை அடுத்த வாரத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது.
