ஹோபர்ட்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், அயர்லாந்துடன் மோதிய இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. ஹாரி டெக்டர் 45 ரன், பால் ஸ்டர்லிங் 34, டாக்ரெல் 14, டக்கர் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். சிமி சிங் 7, மெக்கார்தி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை பந்துவீச்சில் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா தலா 2, பினுரா, லாகிரு குமாரா, சமிகா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து வென்றது. தனஞ்ஜெயா டி சில்வா 31 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி டெலானி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டக்கரிடம் பிடிபட்டார். குசால் மெண்டிஸ் 68 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சரித் அசலங்கா 31 ரன்னுடன் (22 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை அணி 2 புள்ளிகள் பெற்றது.