×

கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப். 30ம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் சிறப்பு தணிக்கை: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவு துறையில் மூலம் அரசின் வருவாயை பெருக்க அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பயனாக கடந்த ஆண்டு பத்திர பதிவு துறை மூலம் ரூ. 15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி மேற்பார்வையில் பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பத்திர பதிவுகளில் அன்றாட நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.

குறிப்பாக பத்திரம் பதிவு செய்யப்பட்ட அன்றே திருப்பி தரப்படுகிறதா?, நிலுவையில் உள்ள பத்திரங்கள் எவை, பத்திரங்களுக்கான கட்டணம் முறையாக நிர்ணயிக்கப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். இருப்பினும், பதிவுத்துறையில் எந்தவித முறைகேட்டுக்கும் இடம் தராத வகையில் பதிவு செய்த ஆவணங்களை சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை மண்டல கட்டுப்பாட்டில் உள்ள 55 சார்பதிவாளர் அலுவலகங்கள், நெல்லை மண்டலத்தில் உள்ள 85 சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட மாநில முழுவதும் உள்ள 525 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடப்பாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை பதிவு செய்த ஆவணங்களை சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் டிஐஜிக்கள், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் கொண்ட குழுவினர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று சிறப்பு தணிக்கை செய்கின்றனர். இதன் மூலம் ஆவண பதிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Registration Department ,IG , Office of the Registrar, Recorded Document, Special Audit, Registry IG, Order
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு