×

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால் இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கின்றனர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வரவேற்றார். கருத்தரங்கை டி.ஆர்.பாலு எம்பி., திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்து பேசினர். பெரியாரின் கொடை அண்ணா என்ற தலைப்பில் திண்டுக்கல்  லியோனி, அண்ணாவின் தம்பி கலைஞர் என்ற தலைப்பில் புலவர் மா.ராமலிங்கம்,  கலைஞரின் வார்ப்பு தலைவர் தளபதி என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன் உரையாற்றினர்.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றிய அமைச்சர்கள் எல்லாம் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இவ்வளவு காலம் அது கிடையாது, இப்படிப்பட்ட நிலைகளை ஒழிக்க, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல் வருகின்ற தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்ற பிறகு 3 மிகப்பெரிய தேர்தல்களின் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதால், இந்தியாவில் திமுகவை வியந்து பார்க்கிறார்கள். நமது முதல்வருக்கு இந்தியாவில் பெரிய மரியாதை உள்ளது. அந்த மரியாதை திமுகவிற்கும், தலைவருக்கும் இருக்க வேண்டும் என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும். அதற்கான பணிகளை திமுகவினர் இன்று முதல் தொடங்க வேண்டும். ஆட்சி இருக்கிறது என்ற இறுமாப்புடன் இல்லாமல்  ஒவ்வொருவரும் பணியாற்றி, இப்போதே வேலையை தொடங்க வேண்டும். இவ்வாறு தா.மோ.அன்பரசன் பேசினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட அவை  தலைவர் தா.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் து.மூர்த்தி, தீர்மான குழு  உறுப்பினர் மீ.அ.வைத்திலிங்கம், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை  உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : CM. ,K. Stalin ,India ,Minister ,T.R. Moe Andarasan , DMK is amazed in India because of Chief Minister M. K. Stalin's good governance: Minister D. M. Anparasan Speech
× RELATED சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்