×

தீபாவளி பண்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி உள்பட 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் நேற்று தீபாவளி பண்டு நடத்தி வசூலித்த ரூ.8 கோடியுடன் ஒரு தம்பதி தலைமறைவாகி விட்டனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தம்பதி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள யமுனா நகர், 3வது தெருவில் சரவணன்-ஜெயலட்சுமி தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களின் வீடு அருகே மஞ்சு மகேஷ் என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துள்ளனர்.

இதற்கிடையே சரவணன், ஜெயலட்சுமி, மஞ்சு மகேஷ் ஆகிய 3 பேரும் அப்பகுதி மக்களிடம் தீபாவளி பண்டு நடத்துவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ரூ.8 கோடி வரை பணம் கட்டியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், தீபாவளி பண்டு முடிந்து தரப்படும் பரிசுபொருள், ஸ்வீட் மற்றும் பணம் வாங்குவதற்காக நேற்று மாலை சரவணன்-ஜெயலட்சுமி தம்பதி வசித்து வீட்டுக்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அப்போது, தீபாவளி பண்டுக்காக வசூலித்த ரூ.8 கோடியுடன் 3 பேரும் தலைமறைவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்றிரவு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தை 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, தீபாவளி பண்டு பணமோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் தலைமறைவான தம்பதி உள்பட 3 பேரையும போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Diwali Pandu , Rs 8 Crore Scam by conducting Diwali Pandu: 3 people including a couple are in the net
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது