×

ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது

ஆவடி: ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த தேவிகா (39) என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உமயபார்வதி (45) மற்றும் அவரது கணவர் செல்வகுமார் (45) ஆகியோர் என்னிடம் நன்கு பழகினர். உமயபார்வதி மற்றும் அவரின் நண்பர் முரளி (48) ஆகியோர் உமன்ஸ் சோசியல் வெல்பர் ஆர்கனைசேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வந்ததாகவும், அந்த டிரஸ்ட் மூலம் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் டெய்லரிங் கிளாஸ் மற்றும் பியூட்டிஷன் வகுப்புகள் நடத்தி வந்ததாகவும் கூறினர்.

மேலும் அந்த டிரஸ்ட் பெயரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பட்டாசு பண்டு போன்றவற்றை நடத்தி வந்தனர். இந்த சீட்டில் சேர்ந்தால் நல்ல பலன் இருக்கும் என்று நம்பிக்கையும், ஆசை வார்த்தையும் கூறினர். அவர் நடத்திவரும் சீட்டில் சேர்ந்து கடந்த 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரை ரூ.2 லட்சம் என 2 சீட்டிற்கு மொத்தம் ரூ.4 லட்சம் ஏலச்சீட்டு கட்டினேன். அந்த தொகையை தராமல் உமயபார்வதி ஏமாற்றி உள்ளார். இதேபோல் சுமார் 16 நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.18.10 லட்சம் ரொக்கப் பணமாகவும், சிலரிடம் தீபாவளி பண்ட் என்ற பெயரில் ரூ.39.39 லட்சத்தையும் ஏமாற்றியுள்ளார் என்று புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செல்வகுமார் மற்றும் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்த உமயபார்வதியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Aavadi ,Aavadi Central Crime Branch ,Diwali Pandu ,Devika ,Thiruninnavur Swadeshi ,Aavadi, Aavadi Central ,Diwali ,Pandu ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...