×

நெல்லையில் தனியார் பஸ் மோதியதில் அலங்கார மின்விளக்கு விழுந்து புதுமாப்பிள்ளை பலி

நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் மினிபஸ் மோதியதில் அலங்கார மின்விளக்கு கம்பம் சரிந்து முன்னால் சென்ற பைக் மீது விழுந்ததில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகேயுள்ள விளாகத்தைச் சேர்ந்த முத்தாரப்பன் மகன் சீனிவாசன்(29). அரசு கான்ட்ராக்டரான இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்து வண்ணார்பேட்டை வழியாக பாளையங்கோட்டையிலுள்ள நண்பரின் கடைக்கு சீனிவாசனும் அவரது நண்பரான விக்னேஷூம் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை சீனிவாசன் ஓட்டினார்.

வண்ணார்பேட்டையிலுள்ள ஒரு ஓட்டல் அருகே செல்லும் போது பைக்கின் பின்னால் வந்த தனியார் மினிபஸ் திடீரென சாலையின் சென்டர் மீடியனிலுள்ள அலங்கார மின்விளக்கு கம்பம் மீது மோதியது. இதில் இரும்பு மின்கம்பம் உடைந்து சீனிவாசன் தலையில் விழுந்தது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சீனிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் சீனிவாசனின் நண்பர் விக்னேஷ் சிறிது சிராய்ப்புடன் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து மாநகர விபத்து தடுப்பு பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் எஸ்ஐ நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தனியார் மினிபஸ் டிரைவரான பாளை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த செண்பகுட்டி மகன் சிவா(33) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மினிபஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் பலியான புதுமாப்பிள்ளை சீனிவாசன் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு விபத்து: இதுபோல் சாந்திநகர் 1வது தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(45) என்பவர் பாளை போத்தீஸ்நகரைச் சேர்ந்த தனது அக்கா மகள் தங்கம்(29), அவரது குழந்தை ஆதிரூபன்(3) ஆகியோருடன் பைக்கில் ஜவுளி எடுக்க வண்ணார்பேட்டை ேநாக்கி வந்தனர். பாளை சித்த மருத்துவ கல்லூரி ரவுண்டானா அருகில் வரும் போது சந்திப்பு பகுதிக்கு வந்த தனியார்  பஸ், பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் பஸ் முன்பகுதியில் சிக்கினர். லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக 3 உயிர் தப்பினர். பொதுமக்கள் அவர்களை  மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Pudumapillai ,Nella , Nellai: A decorative lamp post fell on a bike in front of it when a private minibus collided with it in Nellai Vannarpettai.
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...