×

கோபி அருகே வாய்க்காலை அடைத்த ஒப்பந்ததாரர் மழைவெள்ளம் புகுந்து 100 ஏக்கர் பயிர் சேதம்

கோபி : கோபி அருகே புதுக்கரைபுதூரில் ஒப்பந்ததாரர் வாய்க்காலை அடைத்து வைத்ததால், மழைவெள்ளம் வயலில் புகுந்து 100 ஏக்கர் கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்தது.
கோபி அந்தியூர் சாலையில், புதுக்கரைபுதூரில் தடப்பள்ளி வாய்க்கால் மீது நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அகலப்படுத்தும் பணி கடந்த 1 மாதமாக  நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்ததாரர் வாய்க்காலை அடைத்து வைத்து பணிகளை செய்து வந்தனர். நேற்று இரவு கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக தடப்பள்ளி வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வெளியேறியது.

ஆனால் வாய்க்காலை அடைத்து வைத்ததால், மழைவெள்ளம் செல்ல வழியின்றி புதுக்கரை புதூர் பகுதி வயல்களில் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் அலட்சியத்தால், புதுக்கரை புதூரில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், கடந்த 1 மாதமாக பாலம் அகலப்படுத்தும் பணி மிக மெதுவாக நடைபெற்றதுதான் இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கோபி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் உடனடியாக அங்கு விரைந்து வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் அடைப்பை துரிதமாக அகற்றினர். அதன் பின்னரே வாய்க்காலில் மழைவெள்ளம் வெளியேற தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க 30வது மைல் வரை உள்ள அனைத்து மதகுகளையும் திறந்து மழைநீர் வெளியேறுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி தாசில்தார் ஆசியா அங்கு சென்று வாய்க்கால் அடைப்பை அகற்றும் பணியை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.

Tags : Gobi , Gobi: 100 acres of sugarcane and banana crops were washed away by rainwater inundation in Pudukkaraiputhur near Gobi after the contractor blocked the drain.
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது