×

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்ததா? திருவிக நகர் வீட்டில் பதுக்கிய ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: 20 சவரன் நகைகளும் சிக்கின, வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: சென்னை திருவிக நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டதா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் முகமதியான் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அடிக்கடி சென்று வருவதாகவும், அங்கு தங்கம் கடத்தப்படுவதாகவும் திருவிக நகர் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று அந்த வீட்டில் போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு முகமது அப்சர் (50) என்பவர் இருந்தார். மேலும், அந்த வீட்டை போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ரூ.50 லட்சம் ரொக்க பணம் கட்டுக்கட்டாக இருந்தது. 20 சவரன் தங்க நகைகளும் இருந்தன. இதுகுறித்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும், முகமது அப்சர் 5 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு சென்னை வந்து துணி வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்ததாகவும், அதன் மூலம் தங்கம் பெற்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், வருமானத்திற்கு அதிகமாக அவரிடம் பணம் இருந்ததால் போலீசார்  வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வருமானவரித்துறை அதிகாரி பாலச்சந்திரன் தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். முகமது அப்சரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ரூ.50 லட்சம் ரொக்கப் பணம் எப்படி வந்தது என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிக நகரில் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் ரொக்கப் பணம், 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Aruthra Gold ,Thiruvika Nagar , Deposited with Arudra Gold? Rs 50 lakh cash stashed in Thiruvik Nagar house seized: 20 Savaran jewels seized, handed over to Income Tax Department
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...