×

சாமியார் மடம்- கோயம்பேடு மினி பஸ் இயக்க வேண்டும்: பேரவையில் தி.நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தியாகராயர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி (திமுக) பேசுகையில்,  கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வழியாக 100 அடி சாலையில் செல்லும் பேருந்துகள் முதலாவது மற்றும் மூன்றாவது அவென்யூ சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், கோயம்பேட்டில் இருந்து 100 அடி சாலை அசோக் நகர் வழியாக செல்லும் வாகனங்கள் 3வது அவென்யூ மற்றும் முதல் அவென்யூ சந்திப்பு வரை  தொடர்ந்து 3 சிக்னல்களை கடக்க வேண்டும். இந்த 3 சிக்னல்களை கடந்து பேருந்து நிறுத்தும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால்,  அந்த வழியில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது இயலாத காரியம்” என்றார்.

ஜெ.கருணாநிதி: கோயம்பேடு அசோக் நகர் வழியாக 100 அடி ரோடு சாலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தால், அந்த பேருந்துகள் நின்று செல்ல எதிர்காலத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சிவசங்கர்: உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி பரீட்சார்த்தமான முறையில் முயற்சி செய்து பார்க்கப்படும். ஜெ.கருணாநிதி: 37டி எனும் பேருந்து இயக்கத்தில் இருந்தது. அந்த பேருந்து கே.கே.நகர் மேற்கு பணிமனையில் இருந்து சாமியார் மடம் வழியாக மின்ட் வள்ளலார் நகர் சென்றடையும். அந்த பேருந்து சேவை கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 25இ, 25பி மற்றும் 27சி பேருந்துகள் சாமியார் மடம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.

அதையும் தாண்டி மேற்கு மாம்பலம் சாமியார் மடத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மினி பேருந்துகள் (சிற்றுந்து) இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் சிவசங்கர்: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போதுமான அளவுக்கு டிரைவர், நடத்துனர் எடுக்காத காரணத்தால் பல பேருந்துகளை நிறுத்தி விட்டார்கள். தற்போது முதல்வர் ஓட்டுநர், நடத்துனர்களை பணி அமர்த்துவதற்கான அறிவுரை வழங்கியுள்ளார். இந்த சூழல் ஏற்படும் போது நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Tags : Samiyar Matham- Koyambedu ,T. Nagar ,MLA ,J. Karunanidhi , Samiyar Math - Koyambedu mini bus should be operated: T. Nagar MLA J. Karunanidhi insists in the Assembly
× RELATED 222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது