×

கோதுமை, பருப்பு, உளுந்து உட்பட 6 தானியத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை, கடுகு உள்ளிட்ட 6 தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 2022-23 பயிர் செய்யும் ஆண்டு (ஜூலை - ஜூன்) மற்றும் 2023-24 சந்தைப்படுத்துதல் பருவத்தில் (ஏப்ரல் - மார்ச்) 6 ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து தானியங்களை அரசு கொள்முதல் செய்யும் போது வழங்கப்படும் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையாகும். இதன்படி, கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டு ரூ.2,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் உற்பத்தி செலவு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,065 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டு ரூ.5,450 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்லி குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு ரூ.1,735 ஆகவும், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்தி ரூ.6,000 ஆகவும், உளுத்தம் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 உயர்த்தி ரூ.5,335 ஆகவும், குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ. 209 உயர்த்தி ரூ.5,650 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரீப் மற்றும் ராபி பருவங்களில் இதுவரை 23 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், கோதுமை மற்றும் கடுகிற்கு உற்பத்தி செலவை விட 100 சதவீதம் வருமானம் கிடைப்பதை அரசு உறுதி செய்து இருப்பதாகவும் அமைச்சக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Increase in minimum support price of 6 grains including wheat, dal, gram
× RELATED கட்சி தாவியவர்களை நம்பி களமிறங்கிய பாஜக!