ஒடிசா போல தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்:ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஒடிசா அரசு எடுத்துள்ள நடவடிக்கை போல, தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: ஒடிசா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடைபிடிப்பதற்கான முன்னுதாரணத்தை ஒடிசா உருவாக்கியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2006ம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 45,000 பேரை ஒரே ஆணையில் பணி நிலைப்பு செய்தார். அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது. இப்போதும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதை மனதில் கொண்டு தமிழ்நாட்டிலும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்து முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.

Related Stories: