×

ஆண்டிபட்டி பகுதியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றியுள்ள கன்னியப்பபிள்ளைப்பட்டி, கோத்தலூத்து, ராஜதாணி, பாலக்கோம்பை, சித்தார்பட்டி, டி.அணைக்கரைப்பட்டி, சில்வார்பட்டி, டி.புதூர், மூணாண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், சேடபட்டி, நடுக்கோட்டை, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி, வெண்டை, அவரை, பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் கிணறு, ஆழ்துளை பாசனம் மூலமாகவே காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சந்தைப்படுத்தப்படுகிறது. இந்தப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

மார்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், பெட்டி ரூ.600 முதல் 800 வரையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ ரூ.25க்கும், பெட்டி ரூ.200 முதல் ரூ.400 வரையில் குறைவான விலையில் சந்தைப்படுத்தப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Antipatti , Tomato prices fall due to increase in supply in Antipatti region: Farmers worried
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...