×

கேரளாவில் கொரோனா பாதுகாப்பு கவச உடை வாங்கியதில் ஊழல்: முன்னாள் அமைச்சர் சைலஜாவுக்கு லோகாயுக்தா நோட்டீஸ்

திருவனந்தபுரம்: கொரோனா பாதுகாப்பு கவச உடை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு லோகாயுக்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வீணா எஸ். நாயர். கேரளாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் வட்டியூர்க்காவு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தநிலையில் இவர் கேரள லோகாயுக்தாவில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: கேரளாவில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வாங்கப்பட்டது. இதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. குறைந்த விலைக்கு கவச உடை கிடைத்த நிலையில் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த லோகாயுக்தா, இது தொடர்பாக டிசம்பர் 8ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே சைலஜா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரிந்து தான் ரூ500க்கான பாதுகாப்பு கவச விடை ரூ1500க்கு வாங்கப்பட்டது. முதலில் வாங்கிய கவச உடைகள் தீர்ந்து போனதால் உடனடியாக அவற்றை வாங்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். முதலில் ரூ500க்கு  உடை கிடைத்தது. ஆனால் சில நாட்களிலேயே விலை ரூ1500ஆக உயர்ந்தது. உடனடி தேவை என்பதால் இது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கூறினேன். சுகாதாரத் துறை ஊழியர்களின் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியமாகும்.

எனவே விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வாங்கலாம். ஆனால் அவை தரமாக இருக்க வேண்டும் என்று பினராயி விஜயன் கூறினார். அதனால்தான் விலை அதிகமாக இருந்த போதிலும் அவற்றை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் 50,000 கவச உடைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் விலை குறைந்ததால் 15 ஆயிரம் உடைகளை வாங்கிய பின்னர், அந்த ஆர்டரை ரத்து செய்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,armoured garment scandal ,Kerala ,Lokayukta ,Minister ,Sailaja , Corruption in purchase of corona protective suit in Kerala: Lokayukta notice to former minister Sailaja
× RELATED கொரோனாவுக்கு பின்னர் அதிகரித்த கண்...