×

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரும் 7.5% ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கலாமே: உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற எஸ்.வர்ஷா என்ற மாணவி தாக்கல் செய்துள்ள மனுவில், எனது தந்தை தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியில் கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்ற துணை மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். அந்த படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒருமுறை 210 மதிப்பெண்ணும், இரண்டாவது முறை 250 மதிப்பெண்ணும் எடுத்தேன்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அமல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து மருத்துவ படிப்பில் ஒரு இடத்தை ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ”அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்த நிலையில் மீண்டும் அதே நிவாரணத்தை கோர முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ உத்தரவிட்டார். அதேநேரம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதி உதவி செய்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களும் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்றுதான் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம். இதை முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் இது அரசின் கொள்கை முடிவுக்கு சம்மத்தப்பட்டது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : HC , 7.5% quota for govt school students can be extended to government aided school students: HC advises
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...