திருவானைக்கோயில் கிராம மனுநீதிநாள் முகாமில் ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருவானைக்கோயில் கிராமத்தில் மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர், கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த திருவானைக்கோயில் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார், வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை 26 நபர்களுக்கும், காதொலிக் கருவி 1 நபருக்கும், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 5 நபர்களுக்கும், இலவச வீட்டு மனைப்பட்டா - 100 நபர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிக் கடன் 6 குழுக்களுக்கு, இலவச தையல் இயந்திரம் 3 நபர்களுக்கும், விலையில்லா இஸ்திரி பெட்டி 10 நபர்களுக்கு, புதிய தொழில் முனைவோர் 5 நபர்களுக்கும்,  தோட்டக்கலைத்துறை சார்பில் 5 நபர்களுக்கும், வேளாண்துறை சார்பில் 12 நபர்களுக்கும் என மொத்தம் 214 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சமூக பாதுகாப்புத்திட்ட துறை, தோட்டக்கலை துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை ரீதியான பணிகள், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், வருவாய் துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: