×

தூங்கா நகரத்தில் தூங்கும் எய்ம்ஸ்... வஞ்சிக்கிறதா ஒன்றிய அரசு: மற்ற மாநிலங்களுக்கு தாராள நிதி ஒதுக்கீடு; தமிழகத்துக்கு மட்டும் வெளிநாட்டிடம் கையேந்த வைத்தது ஏன்?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிப்பது எப்போது? தமிழக தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் மனதில் எழுந்த இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர் யாருமே இல்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் எய்ம்ஸ் நம் மாநிலத்துக்கு வருவதை அறிந்து மக்கள் உயர் தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். வெறும் அறிவிப்போடு நின்ற இந்த எய்ம்ஸ் அமையும் இடம் தேர்வு செய்யவே மூன்றாண்டானது. ஒருவழியாக 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அதே காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று ஒன்றிரண்டு திறக்கப்பட்டும் விட்டது. மேலும் சில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால், 2023ல் திறக்கப்பட வேண்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல், அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. இன்றளவில் மதுரை எய்ம்ஸ் வெறும் பொட்டல்காடுதான். இந்த அவலத்துக்கு காரணம் ஒன்றிய அரசுதான். 2014ல் மத்தியில் ஆட்சியை பிடித்த மோடி அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தம் 16 எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்களை அறிவித்தது. அதில், மதுரை உள்ளிட்ட 10 எய்ம்ஸ்களை கடன் வாங்கி கட்ட முடிவு எடுத்தது.

9 திட்டங்களுக்கு பணிக்கான மொத்த செலவில் 30 முதல் 35 சதவீதம் மட்டுமே கடனாக வாங்க திட்டமிட்ட ஒன்றிய அரசு, மதுரைக்கு மட்டும் திட்டச் செலவில் 75 சதவீதம் அதாவது மூன்றில் இரண்டு பங்கை கடனாக வாங்க திட்டமிட்டது.  இதில் மதுரை தவிர மற்ற 9 திட்டங்களுக்கு உயர் கல்வி கடனுதவி நிறுவனத்திடம் (எச்இஎப்ஏ)  இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த உயர் கல்வி கடனுதவி நிறுவனத்தை நடத்துவது யார் தெரியுமா? ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகமும், அரசுக்கு சொந்தமான கனரா வங்கியும்தான். ஒரு அரசு நிறுவனத்திடம் இருந்து அரசே கடன் வாங்குவது வெகு சுலபமானது என்பது எல்லோரும் அறிந்ததுதான். இதனால், எளிதாக கடன் வழங்கப்பட்டு, பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.
ஆனால், மதுரை எம்ய்ஸ் பணிகள் மட்டும் அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது.

இதற்கு 75 சதவீத திட்டச் செலவையும் கடனாக வாங்கி செலவளிக்க திட்டமிட்ட ஒன்றிய அரசின் சூழ்ச்சியும் காரணம் என்று மதுரை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை எம்ய்சுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் (ஜிகா) இருந்து கடன் பெறப்படும் என்று அறிவித்தது அந்த சூழ்ச்சியின் மையம். ஒரு திட்டத்துக்கு, ஜிகா போன்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதியுதவி பெறுவது ஏழு கடல், ஏழு மலையை தாண்டுவது போன்ற மிகவும் கடினமான செயல். அந்த அளவுக்கு கண்ணில் விளக்கெண்னெய் ஊற்றி திட்டத்தை ஆய்வு செய்வார்கள். இதனாலேயே பல திட்டங்கள் தாமதமாகிவிடும். திட்டத்தின் சிறு மாற்றம் என்றால் கூட அதற்கு ஜிகாவின் ஒப்புதல் பெற ஓராண்டுக்கு மேலாகிவிடும்.

 உதாரணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் என்ற இடத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், சென்னையில் உள்ள ஏரிகள் வறண்டு போனால் கூட குடிநீர் பஞ்சம் வராது. ஜிகாவின் கடுமையான விதிமுறைகள் காரணமாக கடந்த அக்டோபர் 2020 முதல் பல முறை முயன்றும் அந்த திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்யமுடியவில்லை. இது போல இன்னும் பல திட்டங்கள் நாடுமுழுவதும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி எல்லாம் தெரிந்தும், ஒன்றிய அரசு வேண்டுமென்றே ஜிகாவிடம் கடன் வாங்கித்தான் மதுரையில் எய்ம்ஸ் கட்டுவோம் என்று பிடிவாதம் பிடிப்பதுதான் சிக்கலுக்கு காரணம். அதே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசு நடத்தும் உயர் கல்வி கடனுதவி நிறுவனத்திடம் கடன் வாங்கி கட்டியிருந்தால் இப்போது, பணிகள் முடிந்து திறக்கப்பட்டிருக்கும்.

மதுரை எய்ம்சோடு 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணிகளில் ஒன்று  இமாச்சலபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் எய்ம்ஸ். இதன் திட்ட மதிப்பீடு ரூ.1471 கோடி. உயர் கல்வி கடனுதவி நிறுவனத்திடம் ரூ.524 கோடி கடன் வாங்கி கட்டி முடித்து கடந்த வாரம் பிரதமர் மோடியும் திறந்து வைத்து விட்டார். ஒரு திட்டத்தை அறிவித்தால், அதை குறுகிய காலத்தில் நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பது அவசியம். இதுதான் ஒவ்வொரு மக்கள் நல அரசின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏதோ அறிவித்தோம், அது எப்போது நிறைவேறினால் எங்களுக்கென்ன என்ற அக்கறையின்றி ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கையாண்டு வருகிறது. மக்கள் நலன் முக்கியம் என்று கருதினால், திட்டத்தை துரிதப்படுத்தி மதுரை எய்ம்சை கட்டி முடித்து திறக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ராமநாதபுரத்தில் இயங்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி
நடப்பு ஆண்டில் மதுரை எம்ய்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிக வளாகம், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு எம்.பி.பி.எஸ் படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

கடந்து வந்த பாதை...
* பிப்.28, 2015 தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது.
* ஜூன் 18, 2018 மதுரை தோப்பூரில் இடம் தேர்வு.
* டிச.17, 2018 மத்திய அமைச்சரவை ஒப்புதல்
* ஜன.27, 2019 பிரதமர் மோடியால் மதுரை எய்ம்சுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
* நவ. 25, 2019 சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது.
* நவ. 3, 2020 மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்டது.
* மார்ச் 26, 2021 ஜிகாவுடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இடம்    ஒப்புதல் அளித்த ஆண்டு    கட்டுமான பணி நிலவரம்
இமாச்சல்
(பிலாஸ்பூர்)    2018    100%
ஆந்திரா
(மங்களகிரி)    2015    100%
மகாராஷ்டிரா
(நாக்பூர்)    2015    100%
பஞ்சாப்
(பத்திண்டா)    2016    100%
உ.பி.
(ரேபரேலி)    2017    100%
உ.பி.
(கோரக்பூர்)    2016    100%
மேற்குவங்காளம்
(கல்யாணி)    2015    100%
ஜார்க்கண்ட்
(தியோகர்)    2018    88%
அசாம்
(கவுகாத்தி)    2017    62%
ஜம்மு
(விஜயபூர்)    2019    62%
குஜராத்
(ராஜ்கோட்)    2019    50%
காஷ்மீர்
(அவந்திபுரா)    2019    24%
தெலங்கானா
(பிபிநகர்)    2018    0% (டெண்டர்
விடப்பட்டுள்ளது)
தமிழ்நாடு
(மதுரை)    2018    0% (நிதி திரட்டும்
பணி நடக்கிறது)
அரியானா
(மனேதி)    2019    0% (நிலம் தேர்வு
நடைபெறுகிறது)
பீகார்
(தர்பங்கா)    2020    0% (நிலம் தேர்வு
நடைபெறுகிறது)

* அடிக்கல்லிலே சறுக்கல்...
கட்டுமான பணிகளுக்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019, ஜன.27ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மத்தியக்குழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், மருத்துவமனைக்கான இடத்தை மத்திய சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணிகள் விரைவில் துவங்கும் எனவும், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இடம் ஒப்படைக்கவே இல்லை என்கிற சர்ச்சை பிறகு பூதாகரமாக வெடித்தது. பின்னர், 2020 நவம்பர் 3ம் தேதிதான் அதிமுக அரசு தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 224.24 ஏக்கர் நிலத்தை ஒன்றிய சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தது.

Tags : AIIMS ,Dhonga ,Union Govt ,Tamil ,Nadu , AIIMS sleeping in Dhonga city... Union Govt cheating: Generous allocation of funds to other states; Why did Tamil Nadu get foreign hands only?
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...