×

15ம் தேதிக்குள் 2ம் அரையாண்டு சொத்து வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: வரும் 15ம் தேதிக்குள் 2ம் அரையாண்டு சொத்து வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2022-23ம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரி, 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 4 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து ரூ.50.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சி, வருவாய் அலுவலர் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன், பற்று அட்டை மூலமாக சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி சொத்துவரி செலுத்தலாம். சென்னை மாநகராட்சியின் வலைதளம் www.chennaicorporation.gov.in மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும், ‘நம்ம சென்னை’ மற்றும் ‘பேடிஎம்’ முதலிய கைபேசி செயலி மூலமாகவும் செலுத்தலாம். பிபிபிஎஸ் மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம். 2022-23ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சொத்துவரியில் 5% ஊக்கத்தொகை பெற இன்றுடன் 5 தினங்களே உள்ளன. எனவே, சொத்து உரிமையாளர்கள் வரும் 15ம் தேதிக்குள் தங்களின் 2ம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தி 5% ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : 2nd semi-annual property tax payment by 15th to get 5% incentive: Corporation notification
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...