×

கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்த பபியா முதலை மரணம்: பல்வேறு கட்சியினர், பக்தர்கள் அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்து, பிரசாதத்தை மட்டுமே தின்று வளர்ந்த பபியா முதலை மரணமடைந்தது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது கும்பளா கிராமம்.  இது கர்நாடக மாநில எல்லையில் உள்ள பகுதியாகும். இங்கு பிரசித்தி பெற்ற  அனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. குளத்தின் நடுவே கோயில்  அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த குளத்தில் கடந்த 75 வருடங்களுக்கு  மேலாக பபியா என்ற ஒரு முதலை வசித்து வந்தது. காலையும், மதியமும் கோயிலில் பூஜை முடிந்த பிறகு  பூசாரி வழங்கும் பிரசாதமான அரிசி சாதத்தை மட்டுமே முதலை சாப்பிடும். இந்த குளத்தின் வடக்கு  பகுதியில் 2 குகைகள் உள்ளன. பகல் நேரங்களில் இந்த குகைக்குள் தான் இந்த  முதலை இருக்கும்.இந்த முதலையை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான  பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம்.

கோயில் நடை திறந்திருக்கும் வரை முதலை  குளத்தை விட்டு வெளியே வராது. நடையை சாத்திவிட்டு அனைவரும் சென்ற பிறகு  தான் வெளியே வரும். ஆனாலும் குளத்தை ஒட்டியுள்ள இடத்தை விட்டு வேறு எங்கும்  செல்லாது. இந்த  நிலையில் இந்த பபியா முதலை நேற்று அதிகாலையில் குளத்தில் இறந்த நிலையில்  காணப்பட்டது. உடனடியாக கோயில் பூசாரிகள் சேர்ந்து முதலையின் உடலை வெளியே  எடுத்து கோயில் நடை முன் வைத்தனர். தகவல் அறிந்ததும் காசர்கோடு  எம்பி ராஜ் மோகன் உண்ணித்தான், எம்எல்ஏக்கள் அஷ்ரப், என்.ஏ.நெல்லிகுன்னு,  பாஜ மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் உள்பட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு  சென்று அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோயில்  வளாகத்திற்குள்ளேயே முதலை அடக்கம் செய்யப்பட்டது. நேற்று மதியம் வரை  கோயிலில் எந்த பூஜைகளும் நடத்தப்படவில்லை. ஒரு முதலைக்காக இறுதி சடங்கு  நடத்தப்படுவதும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும்.

* கடந்த 1945ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் குளத்தில் இருந்த ஒரு முதலையை சுட்டுக் கொன்றதாகவும், மறுநாளே இந்த பபியா முதலை அந்த குளத்தில் திடீரென தோன்றியது என்றும் நம்பப்படுகிறது.

* கோயில் பூசாரி அரிசி சாதத்துடன் குளத்தின் கரைக்கு சென்று பபியா என்று அழைத்தவுடன் பாய்ந்து  வந்து உணவை  சாப்பிட்டுவிட்டு மீண்டும் குளத்திற்குள் சென்று விடும்.  குளத்தில்  கிடக்கும் மீன்களை கூட பபியா முதலை சாப்பிடாது.


Tags : Papiya Crocodile ,Kerala , Papia Crocodile, who lived in Kerala temple pond for over 75 years, dies: Various parties, devotees pay tribute
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...