×

சேலம் அருகே பரபரப்பு பேட்டி; ரூ41 ஆயிரம் கோடி ரகசியம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஓமலூர்: ரூ41 ஆயிரம் கோடி ரகசியம் பற்றி சேலம் அருகே ஓமலூரில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேட்டியளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். இந்த வழக்கில் உள்ளவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் அனைவரும் கொடும் குற்றவாளிகள். அதிமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது அவதூறு பரப்பி வருகிறார்கள்.இந்த வழக்கில் இதுவரை ஒன்றும் கிடைக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காலம் கடத்துவதற்காக இதனை செய்து உள்ளதாகவே கருதுகிறோம். ஜேசிடி.பிரபாகரன் ரூ41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிட உள்ளதாக கூறியிருக்கிறார். அவர் (ஜேசிடி.பிரபாகரன்) இன்னும் கட்சி வேட்டியே கட்டாதவர். அவர் அதிமுக கட்சிக்காரன் என சொல்வதற்கு அருகதை அற்றவர்.

பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர். வேடந்தாங்கல் பறவை போன்று சீசனுக்கு சீசன் கட்சி மாறுபவர். ரூ41 ஆயிரம் கோடி எங்கயிருந்து எடுக்கப்பட்டது? ஊழல் தொடர்பாக என் மீது வழக்கு போட்டனர். எங்களை பொறுத்தவரை மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. இவ்வாறு அவர் கூறினார். 2 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நாங்கள் தெரிவித்ததால்தான் ரெய்டு நடந்தது என கோவை செல்வராஜ் தெரிவித்து இருக்கிறாரே என கேட்டதற்கு, கோவை செல்வராஜ் யார்? கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.? அவருக்கு அதிமுக வரலாறு தெரியுமா.?

யார்,யாரெல்லாம் வெவ்வேறு கட்சியில் இருந்து வருகிறார்களோ அவர்கள் சொல்வதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகிறது. செல்வராஜூம், ஜேசிடி. பிரபாகரனும் அதிமுகவிற்கு விசுவாசம் இல்லாதவர்கள். கட்சிக்குள் இருந்தே அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்கள் போன்றவர்களை களை எடுத்து வருகிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்தார்.

Tags : Stirma ,Salem ,Edapadi Palanisamy , A sensational interview near Salem; Rs 41 thousand crore secret: Edappadi Palaniswami obsession
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!