×

நடைபாதை, சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 2 கிலோ, 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: கூட்டுறவு சங்கம் மூலம் நடைபாதை, சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 2 கிலோ, 5 கிலோ இன்டேன் நிறுவன காஸ் சிலிண்டர் விற்பனையை  அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை கடைகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் நிறுவன சிறிய ரக காஸ் சிலிண்டர்களை கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை துவக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்முறையாக நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் பயனடைவர். 2 கிலோ மற்றும் 5 கிலோ ரக காஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு எவ்வித முகவரி சான்றும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை மட்டும் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். சென்னை தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் நேற்று கூட்டுறவு சங்க சுய சேவை பிரிவுகள் மூலம் 2 கிலோ, 5 கிலோ இன்டேன் காஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், கூட்டுறவு சங்க சுய சேவை பிரிவு மூலம் தலா ரூ.10 வீதம் 24 மளிகை பொருட்கள் கொண்ட பாக்கெட் விற்பனையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேசியதாவது: கூட்டுறவு துறையின் மூலமாக, சாலையோர வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அத்தனை பகுதிகளிலும், சமூகத்தில் அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவும், பாதுகாக்கவும் 2 கிலோ கேஸ் வழங்கும் திட்டத்தையும், 5 கிலோ வரை கேஸ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக, இந்தியாவில் முதன்மையாக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின்  அறிவுரை வழங்கினார். இது எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் திட்டமாக, சாமானிய மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற திட்டமாக இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இப்படி எல்லாம் நாங்கள் எளிய மக்களுக்காக பல சாதனைகளை செய்தோம். இப்போது கொடுக்கப்படும், 2 மற்றும் 5 சிலிண்டர் சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் என சாதாரண மக்களுக்கு இது பயன்படும். இதற்கு முகவரி எல்லாம் தேவை இல்லை. சாதாரண அடையாள அட்டையை காட்டி வாங்கி கொள்ளலாம். இவ்வாறு பேசினார். இந்த விழாவில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், தலைமை பொது மேலாளர் தனப்பாண்டியன், இந்தியன் எண்ணெய் கழகம் தமிழ்நாடு மாநில அலுவலக நிர்வாக இயக்குநர் வீ.சி.அசோகன், சென்னை மாநகராட்சி பணிக்குழு தலைவர் சிற்றரசு, மண்டல தலைவர் எஸ்.மதன்மோகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* புது காஸ் விலை எவ்வளவு?
2 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.961.50 புதிய இணைப்பிற்கும், சிலிண்டர்களில் காஸ் நிரப்புவதற்கு ரூ.253.50ம், மற்றும் 5 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.1,528 புதிய இணைப்பிற்கும், காஸ் நிரப்ப ரூ.584 என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

Tags : Minister ,I.Periyasamy , Sale of 2 kg and 5 kg gas cylinders to benefit pavement and small traders: Minister I. Periyasamy launched
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...