×

நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி விவகாரம் அசல் விடைத்தாளை மாணவிக்கு காண்பிக்க வேண்டும்: தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும் படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜூலையில் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள், ஜூலை 31ம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  பின்னர் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, தனது விடைத் தாள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : National Examinations Agency , NEET mark malpractice case original answer sheet to be shown to student: Court order to National Examinations Agency
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!