×

30 இளம் வல்லுநர்களுக்கு, 30 நாள் பயிற்சியுடன் கூடிய தமிழ்நாடு முதலமைச்சரின் 2 ஆண்டு புத்தாய்வு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு தனது அனைத்து துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால ‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை (2022-2024)’’ அறிமுகப்படுத்தி உள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம், திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்பு திட்ட செயலாக்க துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும். மேலும் சேவை பணிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு இளம் வல்லுநர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளிலும், நல்லாட்சி வழங்குவதிலும் இளம் வல்லுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டுமென முதல்வர் கேட்டுக்கொண்டார். புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இளம் வல்லுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயண செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும்.

இரண்டு வருட புத்தாய்வு திட்டத்தை திருப்திகரமாக நிறைவு செய்யும் வல்லுநர்களுக்கு, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் வழங்கும். இதுதவிர, ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் த.வேலு எம்எல்ஏ, தலைமை செயலாளர் இறையன்பு, சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர்கள் உதயச்சந்திரன்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin , Tamil Nadu Chief Minister's 2-year refresher program with 30-day training for 30 young professionals: Chief Minister MK Stalin launches
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...