பொன்னமராவதியில் அமரகண்டான் குளம் ரூ.1.39 கோடியில் மேம்படுத்த திட்டம்-அமைச்சர் ரகுபதி முயற்சியால் விரைவில் பணிகள் துவக்கம்

பொன்னமராவதி : பொன்னமராவதியில் உள்ள அமரகண்டான் குளம் ரூ.1.39கோடி மதப்பில் மேம்பாடு செய்யவேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறப் போகிறது.

பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமரகண்டான் குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குபுறம் காவல் நிலையம், சிவன்கோயில், பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது. தெற்குப்புறம் பட்டமரத்தான் கோயில், பத்திர பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம்,தபால்நிலையம், நூலகம், பெட்ரோல் பங்கு, கிழக்குப்புறம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பேரூந்து நிலையம் மற்றும் கடைகள் என நான்கு புறமும் முக்கிய அலுவலகம், கோயில்கள் உள்ளது.

இப்பகுதி ஒரு சிறப்பு மிக்க பகுதியாகும். புராதன சிறப்பு மிக்க இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. மேலும் ஊரின் மையப்பகுதியில் அழகாக இருக்க வேண்டிய குளம் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இந்த குளத்தை சீர் செய்து 4 புறமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், இப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. எனவே இந்த குளத்தைச்சுற்றி பூங்கா அமைத்து நடைபயிற்சி பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து குளத்தை மேம்பாடு செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி இந்த அமரகண்டான் குளக்கரைகளில் பேவர் பிளாக் அமைத்து நடைபாதை அமைக்க ரூ.1.39 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் ரகுபதி. இதனையடுத்து இந்த நிலையில் இந்த குளம் மேம்பாடு செய்யும் பணி தொடங்கவுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற உள்ளது.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்த அமரகண்டான் குளத்தினை மேம்பாடு செய்யும் பணி திமுக அரசு பொறுப்பேற்றதும் நடைபெற உள்ளது. அதேநேரம் விரைவாக பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் சிவன் கோயில் மேம்பாடு செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. சந்தைப்பகுதி மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மின் மயானம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இந்த குளத்தினை மேம்பாடு செய்யும் பணியினை விரைந்து தொடங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: