×

வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் விருவீடு ஊராட்சி, விராலி மாயன்பட்டி ஊராட்சி மற்றும் சந்தையூர் ஊராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது.

விருவீடு பகுதி விவசாயிகள் கண்மாய்களையும், கண்மாயில் இருந்து ஊற்று பெறும் கிணறுகளையும் நம்பியே விவசாயம் செய்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வைகை அணையில் இருந்து வரும் 58 கால்வாய் மூலம் கண்மாய்களில் தண்ணீர் பெறப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. திருவிழா முகூர்த்த நாள் போன்ற நாட்களில் முருங்கைக்காய் விலை ஏறுகின்றது. சில நாட்களில் எதிர்பாராத விதமாக முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைகிறது.

இதனால் விவசாயிகள் நஷ்டமும் ஏமாற்றமும் அடைகின்றனர். மேலும் நிலக்கோட்டை பகுதிகளில் பூ விலை குறையும் போது பூக்களை சென்ட் கம்பெனிக்கு விற்று ஓரளவு நஷ்டத்தை குறைப்பார்கள். அதுபோல முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடையும் போது அப்பகுதியில் முருங்கக்காய் பவுடர் தொழிற்சாலை இருந்தால் அங்கே முருங்கைக்காயை போட்டு நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விருவீடு பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.

முருங்கைக்காய் விவசாயத்தில் அடிக்கடி நஷ்டம் ஏற்படுவதால் பல விவசாயிகள் அவரை மற்றும் நெல்லி போன்ற விவசாயத்துக்கு மாறி விட்டனர். சிலர் கலர் மீன் பண்ணை வைத்து விவசாய தொழிலையே மாற்றிக் கொண்டனர்.எனவே தமிழக அரசு முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலையில் உடனடி கவனம் செலுத்தி முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Viruidu ,Vatthalakundu , Vatthalakundu: Farmers demand to set up a drumstick powder factory in Viruidu area near Vattalakundu.
× RELATED வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்