×

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிந்தது: டிசம்பரில் ரிசல்ட் வெளியிட வாய்ப்பு

சென்னை: சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து டிசம்பரில் ரிசல்ட் வெளியிட யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய(2022ம் ஆண்டுக்கான) ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் 1011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 610 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காலையில் முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடந்தது. தொடர்ந்து 17ம் தேதி காலையில் 2ம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், 18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடந்தது. 4வது நாளான நேற்று காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடந்தது. இந்த நிலையில் 5வது நாளான இன்று காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வு நடந்தது. மாலையில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கூறினர்.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வு கடந்த 16, 17, 18, 24 மற்றும் 25ம் தேதி(இன்று) என 5 நாட்கள் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் 2 பள்ளிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. மெயின் தேர்வுக்கான ரிசல்ட் அனேகமாக வருகிற டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்தில் ரிசல்ட் வெளியினால் பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெறும். அதே நேரத்தில் ஜனவரியில் ரிசல்ட் வெளியிடும் பட்சத்தில் மார்ச்சில் நேர்காணல் நடைபெற வாய்ப்புள்ளது. மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தகுதி நிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IAS ,Chennai ,IPS , Chennai 5-day main exam for IAS, IPS posts ends today: Result likely to be released in December
× RELATED ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான...