×

மக்கள் பணத்தை மோசடி செய்யும் நிதி நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: தமாகா காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த  தனியார் நிதி நிறுவனங்களை  கண்டித்தும் பணத்தை மீட்டுத்தர கோரியும் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

போலி நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பணத்தை மீட்டு கொடுத்திடவேண்டும். மோசடி நிதி நிறுவன முதலாளிகள், இயக்குனர்கள், முகவர்களை உடனடியாக கைது செய்திடவேண்டும். இவ்விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளவேண்டும். பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்திடவேண்டும்.

போலி நிதி நிறுவனங்களை தடை செய்திடவேண்டும். ஒரு  தனியார்  நிதி நிறுவனம் 93 ஆயிரம் பேரிடம் 2125 கோடி ரூபாய் வசூல் செய்து ஆடம்பர பங்களா, நிலங்கள், பினாமி பெயரில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளது. இவற்றை அவர்களிடமிருந்து மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு திருப்பி அளிக்கவேண்டும். தமிழகத்தில் பல பகுதிகளில் புற்றீசல்போல் மோசடி நிறுவனங்கள் முளைத்துள்ளன. இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாநகர தலைவர் சுகுமார் வரவேற்றார். இதில், மாநில துணை தலைவர் இஎஸ்எஸ்.ராமன், மாநில துணை பொது செயலாளர் விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் காந்த், சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் விஷார் கார்த்தி, ஜி.கே.கஜா, சசிகுமார், மாடசாமி, யுவகுமார், யுவராஜ், ரஜினி, சுதர்சன், பாஸ்கர், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கே.பி.கே.எஸ்.தென்னவன் நன்றி கூறினார்.

Tags : GK Vasan , An end to financial institutions defrauding people's money: GK Vasan insists
× RELATED பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி தமாகா...