×

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்று பயிரிட்டு, அதனை பசுமையாக பராமரித்து வந்தார். இதனால், ஆங்கிலேயே அதிகாரிகள்  இவருக்கு 1054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி கவுரவித்தனர். பின்னர், ஆளவந்தார் பல ஆண்டுக்கு முன், ‘‘நான் உயிரிழந்த பிறகு தனது பெயரில் உள்ள சொத்துகள் தர்ம சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்’’ என உயில் எழுதி வைத்திருந்தார். மேலும், இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயில், மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்பதி பெருமாள் கோயில்களில் உற்சவம் நடக்கும் போது, அன்னதானம் வழங்க, உயில் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆளவந்தார் சொத்துகளை பலர் ஆக்கிரமித்துள்ளதாக, தனிநபர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம், இளந்தோப்பு, பட்டிப்புலம், கிருஷ்ணன் காரணை, நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு மற்றும் சுவர் எழுப்பி உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத் துறை கணக்கில் கொண்டு வந்து, எவ்வளவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக தாங்களே முன் வந்து, ஆக்கிரமிப்பை அகற்றிகொள்ள வேண்டுமென அறநிலையத் துறை சார்பில் தபால் மூலம் உத்தரவு நகல் அனுப்பப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து, அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் பட்டிப்புலம், இளந்தோப்பு, சாலவான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.300 கோடி மதிப்பிலான ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை அதிரடியாக மீட்டனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து 4 வீடுகள், 5 கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, செங்கல்பட்டு அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல்  முன்னிலையில், நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளை அதிரடியாக மீட்டனர்.

Tags : Alavandar Trust ,Department of Charitable Trusts , Recovery of assets worth Rs 8 crore belonging to Alavandar Trust: Action taken by the Department of Charitable Trusts
× RELATED ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான...