நாட்டின் அனைத்து முக்கிய பிரச்னைகளுக்கும் காரணம் பாஜகவின் சகிப்பின்மை, பிரிவினைவாதம் ஆகியவையே: ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: நம் நாட்டை ஆளும் பாஜக பரப்பும் சகிப்பின்மை, வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் தான் அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் முக்கிய காரணமாகும் என்று எர்ணாகுளத்தில் ராகுல் காந்தி கூறினார். கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி நேற்று இரவு எர்ணாகுளம் மாவட்டத்திற்குள் நுழைந்தார்.

அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது:

இந்தியாவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணை சீனா தன் வசப்படுத்தி உள்ளது. ஆனால் இந்திய மண்ணில் யாரும் ஊடுருவவில்லை என்று பிரதமர் கூறுகிறார். டெல்லி அளவுக்கு பரப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து சீனா அதன் மேல் அமர்ந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் பிரதமருக்கோ, பாஜகவுக்கோ கவலையில்லை. நாட்டை ஆளும் பாஜக பரப்பும் சகிப்பின்மை, பிரிவினைவாதம், வெறுப்பு அரசியல் ஆகியவைதான் அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்கும் காரணம். மேலும் கடுமையான வேலை இல்லா திண்டாட்டத்திற்கும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் முக்கிய காரணங்கள் ஆகும். பிஎச்டி படித்தவர்களுக்கு கூட நம் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் உலகிலேயே 2வது பணக்காரர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் 5 பெரும் பணக்காரர்களின் மிகவும் நெருங்கிய நண்பர் நம்முடைய பிரதமர். அதே நேரத்தில் நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்கள் மிகவும் துன்புறுகின்றனர். நம் நாடு பலவீனமடைந்து வருகிறது. நாட்டு மக்கள் பிரிவினைவாதத்தில் சிக்கி பிளவுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு பெரும் தலைவர் சகிப்பின்மையை பரப்பியிருக்கிறார்களா? யாரும் கிடையாது. அதனால்தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்கள் இன்றும் நாட்டு மக்களால் கவுரவிக்கப்படுகின்றனர். ஆனால் பாஜகவும், அதன் தலைவர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து 14வது நாள் நடைபயணத்தை இன்று காலை சுமார் 7 மணி அளவில் ராகுல் காந்தி எர்ணாகுளம் கும்பளம் டோல்கேட் சந்திப்பில் இருந்து திரளான தொண்டர்களுடன் புறப்பட்டார். அவருடன் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் எம்எல்ஏ, எர்ணாகுளம் எம்பி ஹைபி ஈடன் உள்பட ஏராளமான தலைவர்களும் சென்றனர்.

இன்று  நாராயண குருவின் நினைவு நாளாகும். இதையொட்டி நடைபயணம் புறப்படுவதற்கு முன்பு  நாராயண குருவின் உருவபடத்திற்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். 11 மணி அளவில் அவர் இடப்பள்ளி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு ஆலுவா தொட்டக்காட்டு சந்திப்பில் இன்றைய பயணத்தை நிறைவு செய்கிறார்.

Related Stories: